நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கு இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க
“ஒற்றையாட்சிக்குள் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரங்களைப் பகிர்வதே சஜித் பிரேமதாஸவின் நிலைப்பாடாக இருக்கின்றது. மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுவதுபோல் நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தவொரு நோக்கமும் இல்லை.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை சஜித் பிரேமதாஸ மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார். அதாவது ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்வதே அவரின் வேலைத்திட்டமாக இருக்கின்றது. எனவே, நாட்டைப் பிளவுபடுத்தும் செயலையோ அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையையோ அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசமைப்பிலுள்ள விடயமாகும். அதனை நடைமுறைப்படுத்துவதை சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதமுடியாது. மாகாண சபைகள் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும். அதனை இந்த அரசு செய்திருக்கலாம். அதனைச் செய்யாமல் எம்மை நோக்கி விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. அது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல” – என்றார்.