சகலரினதும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் அரசமைப்பு வேண்டும் – நலிந்த ஜயதிஸ்ஸ
“இலங்கையில் மாகாண சபை முறைமையும், அதிகாரப் பகிர்வு பொறிமுறைமையும் தோல்வி கண்டுள்ளன. சமஷ்டிக் கட்டமைப்பையும் ஏற்கமுடியாது. அனைத்து இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய புதியதொரு அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கையில் சமஷ்டி பொறிமுறை நடைமுறைக்கு வருவதை ஜே.வி.பி. விரும்புகின்றதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையை சமஷ்டி கட்டமைப்புடைய நாடாக மாற்றுவதற்கு நாம் என்றும் எதிர்ப்பு என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். கடந்த ஆட்சியின்போது புதிய அரசமைப்பு உருவாக்கப்படவில்லை. அதற்கான யோசனைகளே முன்வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட எந்தவொரு யோசனையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே புதிய அரசமைப்பு அவசியம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ந்தும் தேவையான என மக்களிடம் கருத்துகோர வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணையின்றியே 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
புதிய அரசமைப்பில் நாட்டின் ஒருமைப்பாடு, அனைத்து மக்களினதும் உரிமைகள் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதுடன், நவீன யுகத்துக்கேற்ற வகையிலான சரத்துகளும் உள்வாங்கப்படவேண்டும். ராஜபக்ச அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அன்று இருந்தது. ஆனால், புதிய அரசமைப்பை இயற்றவில்லை. 18 ஆவது திருத்தச் சட்டமே கொண்டுவரப்பட்டது.
அதேவேளை, அதிகாரப்பகிர்வு நடைமுறை தோல்வி கண்டுள்ளது. மாகாண சபைகளும் முறையாக இயங்கவில்லை. எனவே, அனைத்து இன மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக்கூடிய புதிய அரசமைப்பு வேண்டும்” – என்றார்.