வட மாகாணத்தில் வீதி விபத்துக்கள் தொடர்வதை அனுமதிக்க முடியாது – ஆளுநர்

”வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. பாதுகாப்பான போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காக, பொலிஸாருடன் இணைந்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கட்டளை பிறப்பித்துள்ளார்.
 
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துக்கள் மற்றும் சட்ட ஒழுங்குகளின் நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகள், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள், உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் அண்மைய தினங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஆளுநர், தொடர்ச்சியாக விபத்துச் சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் தொடர்பான விளக்கங்களைக் கோரியிருந்தார். இதன்போது இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்பதையும் திட்டவட்டமாக அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

அத்துடன் விசேடமாக முக்கிய வீதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துமாறும், கனரக வாகனங்கள் நகரங்களினுள் பிரவேசிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!