நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண்டு வீசப்பட்டது – சந்திரிகா
” நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது. உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும் “
– எனக் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் 1995ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்தாக்குதலில் 147 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். யாழ். குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்கள் விமானப் படைக் குண்டு வீச்சில் மரணமாகினர். அவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலை கடைப்பிடிப்பதற்குத் தடை விதிக்குமாறு கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இது தொடர்பில் சந்திரிகாவிடம் கேட்டபோது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினர் தவறுதலாகவே குண்டு வீச்சு நடத்தினர். விமானப் படையினரின் இலக்காக தேவாலயம் இருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதுமே விமானப் படையினரைக் கண்டித்தேன். உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்கக் கூடாது” என்றார்.