ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக இராணுவம் – சம்பந்தன்
“வடக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைக் குறிவைத்து அரச படைகள் மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக விசாரணை நடத்தி அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கில் அரச சார்பு கட்சிகளை வெல்ல வைப்பதற்காகவே தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைப் படையினர் அச்சுறுத்துகின்றார்கள் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் சுதந்திரமாக – நீதியாக நடைபெறத் தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் அண்மையில் நடத்திய சந்திப்பின்போது உறுதியளித்திருந்தார். ஆனால், வடக்கின் நிலைமை மோசமாக இருக்கின்றது. அங்கு சுதந்திரமான – நீதியான தேர்தல் நடைபெறுமா என்ற வினா எழுந்துள்ளது.
தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைக் குறிவைத்து இராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள் அதிகரித்தவாறு உள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி உடன் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்