தேர்தலில் படையினர் தலையீடு என்பது பொய்யான குற்றச்சாட்டு – இராணுவத் தளபதி
“வடக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் அரச படைகள் செயற்படவில்லை. பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் படையினர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.”
– இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களுக்கும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்களினால் இராணுவத்தின் தலையீடு தொடர்பாக முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுளதாவது:
‘பாராளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் இராணுவப் பிரசன்னம் மிகமிக அதிகமான அளவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இந்த நிலை இன்னும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளுக்குத் தினமும் செல்லும் அரச புலனாய்வாளர்கள் வேட்பாளர்களையும் அவர்களது குடும்ப உறவுகளையும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்கின்றனர். வேட்பாளர்களைப் புகைப்படம் எடுக்கும் அரச புலனாய்வாளர்கள், தினமும் எங்கே போகின்றீர்கள், எங்கு பிரசாரக் கூட்டம் எனப் பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றனர்.
புலனாய்வாளர்கள் ஒருபுறம் நெருக்கடியை ஏற்படுத்தும் அதேவேளை, இராணுவத்தினரும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். வேட்பாளர்கள் பயணிக்கும்போது வீதிகளில் வழிமறிக்கும் படையினர், தேர்தல் பிரசுரம் இருக்கின்றதா, துண்டுப்பிரசுரம் கொண்டு போகின்றீர்களா என விசாரிக்கின்றனர். தேர்தல் பணியில் அலுவலர்களும் அவர்களுக்கு உதவியாக பொலிஸாருமே செயற்பட வேண்டிய நிலையில் படையினரின் நடவடிக்கைகள் அச்சுறுத்தலாகவுள்ளன’ என்று முறையிடப்பட்டுள்ளது
இது தொடர்பில் இராணுவத் தளபதியிடம் வினவியபோது,
“வடக்குக்கு மட்டுமல்ல முழு நாட்டின் பாதுகாப்புக்கும் அரச படைகளே பொறுப்பு. பாதுகாப்பு நடவடிகளுக்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஒன்பது மாகாணங்களிலும் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், எவரையும் அச்சுறுத்தும் விதத்தில் படையினர் செயற்படவில்லை.
அதேவேளை, வடக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் அரச படைகள் செயற்படவில்லை. பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் படையினர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இது அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல். எனவே, தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடக்க வேண்டும். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும்” – என்றார்.