மாற்றத்துக்காக வாக்களித்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் – சஜித்
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/SAJITH-1024x576.jpg)
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்துக்காக வாக்களித்த மக்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிடைந்துள்ளதுடன் நாடு என்றுமில்லாத வகையில் பலவீனமடைந்துள்ளது”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த அரசு தங்கள் விருப்பங்களையே நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றது. கோட்டாபய ராஜபக்சவை நம்பி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 6.9 மில்லியன் மக்களின் நம்பிக்கையை இந்த அரசின் நடவடிக்கைகள் சிதறடித்துள்ளன.
பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள். பொதுமக்களின் கரங்களில் பணம் இல்லை; வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. அவர்களின் வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய நடுத்தர தொழில்துறை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. தொழிலார்கள் பலர் வேலையிழந்து அலைகின்றார்கள்.
நாடு பொருளாதாரச் சுமைகளைச் சந்தித்துள்ளது. என்றுமில்லாத வகையில் நாடு பலவீனமடைந்துள்ளது. போதியளவு நிதி இல்லாததன் காரணமாக மக்கள் மீது சுமைகள் செலுத்தப்பட்டுள்ளன.
எனவே, இவற்றுக்குத் தீர்வு காண புதிய ஆட்சியே வேண்டும். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் அந்த ஆட்சியை நாட்டு மக்கள் நிறுவ வேண்டும்” – என்றார்.