வெலிக்கடைச் சிறையில் கொரோனா; கட்டாய தனிமைப்படுத்தலில் 770 பேர்

வெலிக்கடைச் சிறைசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில், இதுவரை  210 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கைதி போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனாத் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த நபருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதியுடன் தொடர்புடைய ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோரும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதற்கமைய போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 474 பேரும், அதன் நிர்வாக அதிகாரிகள் 131 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று பொலனறுவை பிரதேசத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரத் ஜயசிங்க தெரிவித்தார்.

அத்தோடு வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள 170 கைதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இதேவேளை, மறு அறிவித்தல் வரும்வரை வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு வெளியாட்கள் உட்செல்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!