ஹொங்கொங் இல் அமுலுக்கு வரும் சீனாவின் பாதுகாப்புச் சட்டம்
ஹொங்கொங் மக்களின் ஜனநாயக ஆதரவுக் கோரிக்கையை முடக்கும் வகையில் சீனா சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தை ஹொங்கொங்கில் அமுல்படுத்தவுள்ளது.
கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் இங்கிலாந்தின் காலணி நாடாக இருந்து வந்த ஹொங்கொங் கடந்த 1997 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று சீனாவுடன் இணைந்தது. அப்போது போடப்பட்ட இங்கிலாந்து – சீன இடையேயான ஒப்பந்தத்தின் படி ஹொங்கொங்கின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் மற்றைய துறை சார்ந்த சட்டங்களை அந்நாடு சுயமாக இயற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் அதாவது 2047ஆம் ஆண்டு வரை அமுலில் இருக்கும்.
தற்போது கொண்டு வந்துள்ள புது சட்டத்தின் மூலம் ஹொங்கொங்கை சீனா தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கின்றது எனக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹொங்கொங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லாம் கைதிகளை சீனாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். ஆனால் இந்த மசோதாவுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அம்மசோதாவிற்கு எதிராக வீதிகளில் திரண்ட மக்கள் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மசோதாவை நிறுத்திவைப்பதாக ஹொங்கொங் அரசு அறிவித்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் சீனாவிடம் இருந்து முழு சுதந்திரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது சீனாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி போரட்டத்தை முற்றிலும் ஒடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஹொங்கொங்கில் போராட்டக்காரர்களை ஒடுக்கவும் அதன் உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா முன் மொழிந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனாவின் மக்கள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜாங் யேசுய், புதிய சூழ்நிலைகள் மற்றும் தேவை காரணமாகவே அதிகாரம் பயன்படுத்தப்படுவதாகவும் ஹொங்கொங்கில் தற்போது உள்ள சூழலில் புதிய பாதுகப்புச்சட்டத்தையும், நெறிமுறைகளையும் அமுல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங் மக்களுக்கு விளக்கமளிக்காமல் புதிய சட்டத்தை சீனா, அமுல்படுத்த முனைகிறது. ஆனால், இந்த புதிய சட்டம் ஹொங்கொங் நிலப்பரப்பில் அனுமதிக்கப்படாத பல விஷயங்களை முடிவுக்குக் கொண்டு வரும் எனவும், ஹொங்கொங்கின் அதிகாரங்களை இச்சட்டத்தின் மூலம் திட்டமிட்டு சீனா கட்டுப்படுத்துவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.