100 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்ட விக்டோரியா – நியூசவுத்வேல்ஸ் எல்லைகள்
அவுஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் விக்டோரியா-நியூ சவுத்வேல்ஸ் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று அவுஸ்திரேலியாவிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனை அடுத்து அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, அங்கு கடந்த மே மாத காலகட்டங்களில் பாதிப்புக்கள் வெகுவாக குறைந்திருந்தன.
இதனால் கடந்த ஜூன் முதல் வாரத்தில் தினசரி சராசரியாக வெறும் 9 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்புவதால் கடந்த வாரத்தில் மட்டும் சராசரியாக 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அவுஸ்திரேலியாவிலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலங்களான விக்டோரியா மற்றும் நியூ சவுத்வேல்ஸ் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விக்டேரியா – நியூ சவுத்வேல்ஸ் இடையேயான எல்லையை காலவரையின்றி அந்நாட்டு அரசு மூடியுள்ளது. அதன்படி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாநில எல்லைகள் மூடப்படுவதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 1919 ஆம் ஆண்டில் ஸ்பேனிஸ் ஃபுளு வைரஸ் காய்ச்சல் பரவியபோது இரு மாநில எல்லைகள் மூடப்பட்டிருந்தன.
இதுவரை அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 8,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.