வெடிமணியமும் இடியன் துவக்கும்
ஈழத்து இயக்குனர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஆளுமைகளில் மதிசுதாவும் ஒருவராவர். அவரின் இயக்கத்தில் அண்மையில் இணையத்தில் வெளியான குறும்படம் தான் வெடிமணியமும் இடியன் துவக்கும். முதியவர் ஒருவருக்கும் அவரின் அன்புப் பேரனுக்கும் இடையிலான உறவை ஈழ மண் மணத்துடன் நெகிழ்வாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கதை :
ஒருவரின் உயிர் அவர் விரும்பிய விடயத்தில் தான் இருக்கிறது என்பதுதான் கரு. வெடி மணியம் என அழைக்கப்படும் மணியம் (முல்லை யேசுதாசன்) நோய் காரணமாக மரணத்துக்கான நாழிகைகளை படுக்கையில் எண்ணிக்கொண்டிருக்கின்ற இறுதிப்பொழுதுகள். அவருக்கு பிடித்த சில செயல்கள் செய்தும் உயிர் பிரிய மறுக்கின்றது. இறுதியாக எப்படி அவரின் உயிர் பிரிந்தது என்பதுதான் கதை.
திரைக்கதை :
Non Linear பாணியில் செல்லும் திரைக்கதையில் மணியத்துக்கும் அவரின் மனைவி எஸ்தரம்மாவிற்க்கும் இடையில் நடக்கும் காட்சிகள் ஒருபுறம், மணியத்துக்கும் பேரப்பிள்ளையான கடுவனுக்கும் இடையிலான சம்பவங்கள் இன்னொருபுறம், மரணவாயிலில் இருக்கும் மணியம், மகன், மச்சான் ஆகிய மூவருக்கும் இடையிலான காட்சிகள் என திரைக்கதையை சலிப்பில்லாமல் அமைத்திருக்கிறார் மதிசுதா.
வசனம்
இந்த குறும்படத்தின் பலமே வசனங்கள் தான்! சில வசனங்கள் ஊடாக பழைய வரலாற்றுக்களை போனபோக்கில் சொல்கிறார் இயக்குனர். அவற்றுள், “கடுவன் துவக்கை பிடிக்கிறதை பூனைக்குட்டியை பிடிக்கிறது மாதிரி பிடிக்கனும், பறிக்கவும் கூடாது நோகவும் கூடாது”, “சின்னப்பாம்பையும் பெரிய பொல்லால் அடி” குறிப்பிடத்தக்க வசனங்கள். ஒரு காட்சியில் “மூச்சை இழுத்துவிடு”, இன்னொரு காட்சியில் “மூச்சை அடக்கி வைத்திரு”.
இயக்கம்
ஈழத்தின் மரபுகளையும் வரலாறுகளையும் தனக்கே உரிய பாணியில் கதை சொல்வதில் மதிசுதா ஒரு சிறந்த கதைசொல்லி என்பதே அவரின் பலம். இந்தக் குறும்படத்திலும் அவரின் அனுபவம் நன்றாகவே தெரிகின்றது. குறிப்பாக குண்டுவீச்சு விமானங்களை காட்டாமலே அதன் தாக்கத்தை உணரச் செய்தலிலும், மணியம் எஸ்தரம்மா சம்பாசனையில் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களிலும் மதிசுதா மிளிர்கின்றார்.
நடிகர்கள்
வெடிமணியமாக வரும் அமரர் முல்லை ஜேசுதாசன் அவர்கள் இப்படத்தில் வாழ்ந்திருக்கின்றார். எமது சினிமாவில் முக்கியமான நடிகர்களில் அவரும் ஒருவர். மனைவியிடம் காட்டுகின்ற மிடுக்கு, கடுவனிடம் காட்டுகின்ற பாசம் என அநாயாசமாக நடித்திருக்கிறார். கடுவனாக நடித்த சிறுவன் சங்கரும் சோடை போகவில்லை. ஏனைய பாத்திரங்களும் தங்கள் பங்கிற்கு திறம்படவே செய்திருக்கின்றார்கள்.
ஒளிப்பதிவு
ரிசி செல்வத்தின் காட்சிக் கவ்வலில் அந்தவீடு, மண் வீதி, குளம் என்பன அருமை. இடையிடையே மங்கலாக இருப்பது மட்டும் தான் இந்தப்படத்தின் குறையாக எனக்கு தெரிகிறது.
இசை:
பத்மயனின் இசை தேவையான இடங்களில் இசைத்தும் சில இடங்களில் மெளனித்தும் அவரின் அனுபவத்தை காட்டுகின்றது. இறுதிக்காட்சியில், மதிசுதாவின் குரலில் அந்தப்பாடல் ஒலிக்கும் போது மனம் ஏனோ கனக்கின்றது.
ஆரம்பத்தில் இதனை நெடும்படமாக எடுக்கவிளைந்ததாக மதிசுதா குறிப்பிட்டிருந்தார். நிச்சயமாக ஒரு நெடும்படமாக அமையக்கூடிய அனைத்து அம்சங்களும் இந்த குறும்படத்தில் இருக்கின்றன. காலமும் பொருளாதாரமும் கைகொடுத்தால் நிச்சயம் நெடும்படமாகவும் வெடி மணியமும் இடியன் துவக்கும் விருதுகள் பல வெல்லும் என்பது திண்ணம். மதிசுதா கொண்டாடப்பட வேண்டிய எங்கள் கலைஞன்.