ராஜபக்ச அரசுக்கு முடிவு கட்டுவோம் – பொன்சேகா சூளுரை

“ராஜபக்ச அரசை வீழ்த்தும் சக்தி ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது. எனவே, பொதுத்தேர்தலில் இந்த அரசை வீழ்த்தியே தீருவோம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தொம்பே பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளுமே இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். சர்வதேச சதிகள் நாட்டுக்கு எதிராக இடம்பெறுகின்றன எனக் கூறி நாட்டை சர்வதேசத்துக்கு விற்கும் நடவடிக்கையை ராஜபக்சகள் முன்னெடுத்து வருகின்றனர்.

எமது ஆட்சி பலவீனமடைய எமது தலைமைத்துவமே காரணமாகும். எமது ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற தவறுகளை எமது தலைமைகள் கண்டுகொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் கட்சியின் உறுப்பினர்களுடன் முரண்பட்ட காரணத்தினாலும், அரசைப் பலவீனப்படுத்த தலைமைத்துவமே செயற்பட்ட காரணத்தினாலும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற தனிக் கட்சியை உருவாக்க நேர்ந்தது. இதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் அவருடன் இருந்த பிரதான தலைமைகளுமே காரணமாகும்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ள அனைவரும் ஊழல்வாதிகள், குற்றவாளிகள். அவர்கள் இந்த நாட்டில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ரணில் விக்கிரமசிங்கவுடன் இனியும் பயணிக்க முடியாது. அத்துடன் ராஜபக்சக்களை வீழ்த்தக்கூடிய ஒரே அணி எமது அணிதான் என்பதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. தவறான வழியில் இந்த அரசு பயணிக்கிறது. தகுதியான நபர்களுக்கு இடம் வழங்கப்படும் எனக் கூறியவர்கள் முழுமையாக இராணுவத்தைப் பலப்படுத்தி வருகின்றனர். குடும்ப ஆட்சியை மேலும் பலப்படுத்தியுள்ளனர்.

நாட்டைக் கட்டியெழுப்புவதாகவும், விவசாயிகளைப் பாதுகாப்பதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்தனர். ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது நாடு சர்வதேசத்துக்கு விற்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கருணா இராணுவத்தைக் கொன்றது தவறில்லை, உலகக் கிண்ணக் கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றது எனக் கூறுவது தவறில்லை, ஆனால், நாம் அரசியல் செய்வதுதான் சர்வதேச சதி எனக் கூறுகின்றனர்.

இந்த நாட்டில் பிரதான குற்றவாளிகள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நாட்டை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்களை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதேவேளை, குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!