தமிழ் படிக்கிறார் ராஷி கண்ணா
மொழி தெரிந்திருந்தால்தான் சில கதாபாத்திரங்களில் ஆத்மார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்த முடியும். அதனால், கடந்த சில வாரங்களாக இணையம் வழி தமிழ் கற்று வருகிறாராம் இளம் நாயகி ராஷி கண்ணா.
இந்தியாவில் ஊரடங்கு முடிவுக்கு வரும்போது தாம் நடிக்கும் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் அளவுக்கு தமிழில் சரளமாகப் பேசமுடியும் என்று நம்புகிறாராம்.
“பல மொழிகளில் நடித்துவரும் நிலையில் ஏன் தமிழை மட்டும் கற்றுக்கொள்கிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். காரணம், தமிழில்தான் தற்போது அதிக படங்களில் நடிக்கிறேன். கடந்த இரு மாதங்களில் மட்டும் தொலைபேசி வழியாக பல கதைகள் கேட்டுவிட்டேன். அவற்றுள் சிலவற்றில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
எனவே, தமிழில் நடிக்கவேண்டுமானால், அம்மொழியை நன்கு தெரிந்துகொண்டு நடிப்பதுதான் நல்லது எனத் தோன்றியது. மொழி தெரிந்திருந்தால்தான் சில கதாபாத்திரங்களில் ஆத்மார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்த முடியும்,” என்கிறார் ராஷி கண்ணா.