கல்வியில் தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கும் வடக்கை முன்னேற்ற நடவடிக்கை – வேலாயுதம் கணேஸ்வரன்
“வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ந்து பின்னிலையில் இருக்கின்றது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உறுதியளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போர்க்காலத்தில்கூட கல்வியில் முன்னிலையில் நின்று கொடி கட்டிப் பறந்த வடக்கு மாகாணம் இன்று பின்னிலையில் இருக்கின்றது. அதாவது மாகாணங்களின் வரிசையில் கடைசி இடத்தில் – ஒன்பதாவது இடத்தில் எமது மாகாணம் உள்ளது. இது மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயம். வீழ்ச்சியடைந்துள்ள வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையைக் மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பொதுத்தேர்தலில் நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் வடக்கு மாகாணத்தை கல்வியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி கல்வி அமைச்சின் ஊடாக இந்த நடவடிக்கையை எடுப்பேன்.
அதேவேளை, விளையாட்டுத்துறையையும் நாம் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். எமது மாகாணத்தில் திறமையான வீரர்கள் இருக்கின்ற போதிலும் தேசிய ரீதியில் – சர்வதேச ரீதியில் அவர்கள் சாதிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்காமல் போகின்றது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் கலந்துரையாடி வடக்கின் விளையாட்டுத்துறையை முன்னோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன். இலங்கையிலும், சர்வதேசப் போட்டிகளிலும் எமது வீரர்கள் சாதிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துவேன்” – என்றார்.