இனவாதிகளின் கொட்டத்தை அடக்க எம்மை வெற்றியடையச் செய்யுங்கள் – ரிஷாத்
“சிறுபான்மை இனத்தை அடக்கி ஒடுக்குவதில் இனவாதிகள் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கொட்டத்தை அடக்க எம்மை வெற்றியடையச் செய்யுங்கள்; சிறுபான்மை இனத்தின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுங்கள்.”
– இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாத் பதியுதீனை ஆதரித்து, இன்று மன்னார், பொற்கேணியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது சமூகம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இவற்றை முறியடிப்பதற்கு ஒற்றுமையே முக்கியம். இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நாம், இந்தத் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கிடையிலான சிறிய பிரச்சினைகளையும் சச்சரவுகளையும் தூக்கிவீசி விட்டு, தேர்தலில் ஒன்றுபடுங்கள். வன்னி மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் வகையிலும், அதனை வென்றெடுக்கும் வகையிலுமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
முசலிப் பிரதேச மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு நாம் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பாருங்கள். இனவாதிகள் எம்மை மிக மோசமாகத் தூசிப்பதற்கும், பழிவாங்குவதற்கும், எங்கள் குடும்பத்தினர் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதற்கும் இந்தப் பிரதேசத்தில் நாம் மேற்கொண்ட மீள்குடியேற்ற முயற்சிகளும் செயற்பாடுகளுமே பிரதான காரணங்கள் ஆகும்.
உங்களது சொந்தக் காணிகளிலே, நீங்கள் முன்னர் வாழ்ந்த பூமியிலே, உங்களை நிம்மதியாக குடியேற்ற வேண்டுமென்ற நோக்கில், வளர்ந்திருந்த காடுகளை துப்பரவாக்கி, கண்ணிவெடிகளை அகற்றி மீள்குடியேற்றியதனாலேயே, “வில்பத்துவை நான் அழிப்பதாக” மோசமாக குற்றஞ்சாட்டினர். பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் என்னை பிழையாக சித்தரித்து, “காடழிப்பவர்” என்ற ஒரு பிரம்மையை தோற்றுவித்தனர்.
இந்தப் பிரதேசத்தில் நாம் மேற்கொண்ட அத்தனை வேலைத்திட்டங்களும் இலகுவாக கிடைத்த ஒன்றல்ல. பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலே ஒவ்வொன்றாக, படிப்படியாக கொண்டுவந்தவைதான்.
காணிப் பிரச்சினைகள் வந்தபோது, அளக்கட்டு போன்ற புதிய கிராமங்களை உருவாக்கி, உங்களை குடியமர்த்தி, எதிர்கால சந்ததியினருக்கு விமோசனம் வழங்கினோம். மறிச்சிக்கட்டி தொடக்கம் கொண்டச்சி வரையிலும், அதற்கப்பால் பொற்கேணி, அளக்கட்டு, அகத்திமுறிப்பு, பிச்சவாணிபகுளம் என காணிகளைப் பகிர்ந்தளித்து உங்களைக் குடியேற்றினோம்.
பிள்ளைகளின் கல்விக்காக புதிய பாடசாலைகள் பலவற்றை உருவாக்கியதோடு மாத்திரமின்றி, ஏற்கனவே இடிந்து, தகர்ந்து கிடந்த பாடசாலைகளை மீள நிர்மாணித்து, அவற்றுள் பல பாடசாலைகளில் மாடிக்கட்டிடங்களையும் அமைத்துத் தந்தோம். மொத்தத்தில் இந்தப் பிரதேசத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் முடிந்தளவில் நிவர்த்தி செய்துள்ளோம்.
இந்தத் தேர்தலில் நாங்கள் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கியுள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களின் ஒத்துழைப்பு மாத்திரமின்றி, நீங்களும் பங்குதாரர்களாக களத்தில் நின்று பிரசாரப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே, நமது அணி பலமடையும். பிரிந்துவிடுவோமேயானால் வருங்காலத்தில் தலைகுனிவோடு வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, வாக்காளர்களாகிய நீங்கள் யதார்த்தத்தைப் புரிந்து, ஒன்றுபட்டு, எமக்கு வெற்றியைப் பெற்றுத்தாருங்கள்” – என்றார்.