ஊரடங்கு அமுலால் உயர்தரப் பரீட்சைக்கு செல்ல முடியாத நிலையில் மாணவர்கள்
க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குச் செல்ல முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் தலைவரான தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா அச்சத்தால் மேல் மாகாணம், குருநாகல் போன்ற பகுதிகளில் ஊரடங்குச் சட்டமும், முடக்கங்களும் விதிக்கப்பட்டிருப்பதால் உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றது.
முறையான போக்குவரத்து வசதிகளை மாணவர்களுக்கு அரசு செய்யத் தவறிவிட்டது. அதனால் தினமும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபா தொடக்கம் இரண்டாயிரம் ரூபா வரையான பணத்தைப் பிரயாணத்துக்காக விரயம் செய்யவேண்டிய நிலைமை உருவாகிவிட்டது.
தற்போதைய அரசு பொதுத்தேர்தலுக்கே கோடிக்கணக்கான ரூபாய்களை வீசியெறிந்த நிலையில் மாணவர்களின் நலனுக்காக ஏன் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.