சஜித்தின் 13 பிளஸ் வாக்குறுதி தமிழருக்குக் கிடைத்த வெற்றி – சம்பந்தன்
“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்தில் உரையாற்றியபோது அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுடன் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வும் வழங்குவேன் என்று வாக்குறுதியளித்துள்ளார். இப்படி அவர் கூற முன்வந்தமை தமிழருக்குக் கிடைத்த ஒரு வெற்றி என்றே நான் நினைக்கின்றேன்.”
-இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலையிலுள்ள அவரது வீட்டில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு தொடர்பில் சஜித் இன்று மாத்திரம் எமக்கு நன்மை தரும் வகையில் கருத்துத் தெரிவிக்கவில்லை. அவர் தொடர்ந்து இதைக் கூறி வருகின்றார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனினும், அந்த நிலைப்பாட்டில் அவர் தொடர்ந்து உறுதியாக இருக்கின்றார் எனின் அது எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.
இதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அவருடைய அரசும் முன்வந்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவும் எமக்குக் கிடைத்த வெற்றியாகும்” – என்றார்.