பயணம் – 01

தென்னந்தோப்பில் ரீங்காரமிட்டபடி சிறகடித்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் மேலும் கீழுமாகப் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. காற்றின் சலசலப்பில் தென்னம் ஓலைகள் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. ‘சில்’ என்ற தென்றல் இதமாகப் பிறப்பெடுத்துக் கொண்டது. இயற்கையின் இரசிப்புக்களை இரசித்துக்கொண்டிருந்த என் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளியாக்கியபடி வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பெண்ணின் வரவு அமைந்தது. ஆக்ரோசமான வார்த்தைகள் என் முன்னால் உருண்டு விழுந்தன.

“எனது அப்பாவையும் அம்மாவையும் யார் இஞ்ச விட்டது? எங்கே அவர்கள்?” அவரது வேகமான வார்த்தைகள் சிந்தி சின்னாபின்னமாகிச் சிதறியது. பாழடைந்த வீடொன்றில் கவனிப்பாரற்றுக் கிடந்த தாயையும் தந்தையையும் கிராம அலுவலரும், சமூக சேவை அதிகாரியும் மனிதாபிமானத்துடன் இல்லத்திற்கு அழைத்து வந்து சேர்த்திருந்தார்கள். மிகுந்த துயரமான நிலையில், பராமரிப்பின்றி அவர்கள் வாழ்ந்திருந்தார்கள். தந்தைக்கு கால்கள் நடக்க முடியாத நிலை. வீட்டின் வாசல் கதவோரம் காணப்பட்ட கறையான் புற்றுக்களை அகற்றிய பின்னர் தான் இந்த முதியவர்கள் மீட்டெடுக்கப்பட்டு முதியோர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இல்லத்திற்கு வந்த அன்று நிம்மதிப் பெருமூச்சை விட்டவாறு கணவனும் மனைவியும் காணப்பட்ட நிலைமை என்னுள் இப்போது நிழலாடியது. அந்த வயது முதிர்ந்த தந்தை என்னிடம் தனியாக வந்து அழுது தீர்த்தார். தனது மகள் இவ்வளவு காலமும் தம்மைப் பார்க்க பணம் அனுப்பியிருந்ததை ஒப்புக்கொண்டார். தற்போது அவருடன் ஏற்பட்ட முரண்பாட்டால், அவரது மகளின் உதவியை உதறித் தள்ளிவிட்டு வறுமையில் வாழ்ந்துள்ளார். இத்தகைய நிலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

மனைவி எந்நேரமும் அழுதபடியே காணப்பட்டார். தமது கடந்த கால நினைவுகள் எல்லாம் மீட்டுப்பார்த்தனர். வேதனையின் எல்லையில் இவர்கள் வாடியதை உறுதிப்படுத்த முடிந்தது. வேதனைகள் வரும் போது இருவரும் சேர்ந்து அழுவார்கள். மிகுந்த அன்புடன் வேதனையைப் பகிர்ந்து கொண்டார்கள்.

நடந்தவற்றை மகள் அறிந்து கொள்கிறார். தான் அவசரப்பட்டதை புரிந்து கொள்கிறார். மனிதம் நிறைந்த புனிதமான இடத்தில் வெளிநாட்டு மகளின் அநாகரிகமான அணுகுமுறைகள் அடிபட்டுப் போகின்றன. வைத்தியசாலையில் இருக்கும் தந்தையைப் பார்ப்பதற்கு தனது தாயையும் இனி வைத்துப் பார்ப்பேன் என்ற உறுதிமொழியுடன் அழைத்துச் சென்றார். முதியவர்கள் ஆங்காங்கே நின்று கையசைத்துக் கொள்கின்றனர். அன்றைய பொழுது மறைந்து… ஓரிரு நாட்கள் கழிகின்றன. தொலைபேசியின் அலறல் சத்தம் கேட்டது.

எதிர்முனையில் இங்கே வந்து பட்டிமன்றம் நடாத்திச் சென்ற பெண்ணின் குரல். “ஐயா வணக்கம். நான் அன்றைக்கு உங்கே வந்திருந்தேன். இப்போது எனது தந்தை இறந்து விட்டார். நீங்கள் அனைவரும் அவரை மிகச் சிறப்பாக பராமரித்து இருக்கின்றீர்கள். எனது தந்தையுடன் பேசிய கணங்களில் எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். நான் இங்கிருந்தால் கூட இவ்வாறு பார்த்திருக்க முடியாது. என்னை நினைத்து நானே வெட்கப்படுகின்றேன். என் பெற்றோரைப் போல இங்கிருக்கும் அனைவரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.” அவரது குரல் தளதளத்துக் கொண்டது.

இறப்பின் செய்திகள் ஒலிபெருக்கியில் இப்போது பகிரப்பட்டு மௌன அஞ்சலிக்காய் எழுந்து கொள்கின்றோம். அனைத்து முதியவர்களும் மௌனமாகப் பிரார்த்தனைகளை ஜெபித்துக் கொள்கின்றார்கள். முன்னர் அந்த முதியவர் என்னிடம் கண்ணீர்த்துளிகளால் அர்ச்சித்துக் கூறிய கதைகள் ஒவ்வொன்றும் என் பேனா முனையில் காவியங்களாக, ஓவியங்களாக மேசையில் இருக்கும் தாளில் பதிந்து கொள்கின்றன.

முச்சக்கரவண்டி ஒன்று உயிரை மாய்த்துக் கொண்டு இல்லத்தின் வாசல் படியில் வந்து நின்றது. இறந்த முதியவரின் மனைவி கண்ணீர் மழையில் நனைந்த படி வருகின்றார். கன்னங்களில் உருண்டு புரண்ட கண்ணீர்த்துளிகள் ஆயிரமாயிரம் கதைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருந்தன.

அந்த வயது முதிர்ந்த அம்மாவின் குரல் ஈனமாக வெளிவந்தது. “எனது கணவனை இவ்வளவு காலமும் நன்றாக பார்த்ததற்காக உத்தியோகத்தர்களை சந்தித்து நன்றி கூற வந்துள்ளேன்.”

அவரது செய்கைகளும் கூப்பிய கரங்களும் இந்தச் செய்தியை உணர்த்தியது. தன்னலமற்று தமது பெற்றோர் போன்று ஒவ்வொரு முதியோரையும் பராமரிக்கும் பணியாளர்களின் பணி இப்போது என் முன் மலை போல் உயர்ந்து நின்றது. அந்த அம்மாவின் நன்றி என்ற வார்த்தைகள் ஆயிரம் அதிர்வலைகளைப் பிறப்பித்து இல்லத்தை நிறைத்து நின்றது. மற்றைய முதியவர்கள் அந்த அம்மாவின் கைகளைப் பிடித்து ஆறுதல்களை மௌனமொழிகளினால் கூறிக் கொண்டனர்.

தனது கணவன் இல்லத்தில் வாழ்ந்த போது முச்சக்கரவண்டியில் சுழன்றடித்த இடங்களை இப்போது தேடிச் செல்கிறார். சற்று நேரம் அவ்விடத்தில் நின்றவாறு கதறிக் கதறி அழுகின்றார். முதியவர்களின் தேற்றுதலில் விடை பெற்றுக் கொண்ட அந்த அம்மாவை சுமந்து செல்வதற்கு அந்த முச்சக்கரவண்டி உயிர் பெற்று தயாராகிக் கொண்டது.

முதியோர் இல்லத்தின் வாசல் கதவுகள் திறந்து கொண்டன. முச்சக்கரவண்டியின் அலறல் ஒலி மேலெழுந்து கொண்டது. சின்னத்திரைகளில் மின்னலாகிக் கொண்ட காட்சிகள் போல் சூழல் விரிந்து கிடந்தது. அடுத்த கட்ட நகர்வுகளுக்காக நாழிகைகள் தயார்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டன.

“என்னவாம்..?” ஒரு முதியவரின் குரல் ஓடி வந்தது. புருவங்களை மேலுயர்த்தி ஆச்சரியமாக நோக்கிக் கொண்டார். தகவல்களை தலையை அசைத்து அசைத்து உள்வாங்கிக் கொள்கின்றார். அடுத்த முதியவரிடம் செய்தியைக் காதில் போட்டுவிட்டு நிம்மதியாக போவது போல அவரின் செய்கைகள் அமைந்து கொள்கின்றன. இறப்பின் செய்தி இறைக்கைகள், கண்கள், காதுகள், மூக்குகள் வைக்கப்பட்டு வாய் வழியாக வதந்திகளை தோழமையாக்கி பவனிவரத் தொடங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!