20′ திருத்தத்துக்கு எதிராக களமிறங்கும் இளைஞர்கள்

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டுக்கு ஆபத்தானது என ஜனநாயகத்துக்கான ஒன்றிணைந்த இளையோர் அணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“20 ஆவது திருத்தம் தேவையற்றது.ஏனெனில் இது நாட்டுக்கு ஆபத்தானது. இதை  நிறைவேற்றும் பட்சத்தில் சிறுபான்மையின மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அதை எதிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இந்த விடயத்துக்கு எதிர்ப்பை வெளியிட முன்வர வேண்டும். அரசியல் தலைவர்கள் இந்த விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது காணப்படுகின்றது.

அதேபோல் பாராளுமன்றத்திலும் கட்சி பேதம் பாராது அனைவரும்  20ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

அதேபோல் தற்போதைய கொரோணா  சூழ்நிலையில் மக்களை ஒருங்கிணைத்து 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்வது சாத்தியமற்ற ஒரு விடயம். எனினும், மக்கள் மத்தியில் 20ஆவது திருத்தத்தின் தீமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது பிரதான நோக்கமாகும். அதேபோல் நாங்கள் இளைஞர் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து மூன்று விடயங்களைச் செயற்படுத்தவுள்ளோம்.

அதில் ஒன்று, 20ஆவது திருத்தம் தொடர்பாக  புதிய முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டு மக்கள் கருத்துப் பகிர்வுடன் புதிய அரசமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, சிறுபான்மை மக்களை 20ஆவது திருத்தம் அதிகளவில் பாதிக்கும் என்பதால் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் இனம், மொழி மற்றும் மதம் பார்க்காது நாடாளுமன்றத்தில் குறித்த சட்ட வரைவுக்கு எதிராகச் செயற்பட வேண்டும்.

மூன்றாவது, மக்கள் தீர்ப்புக்கு இந்தத் திருத்தம் இருந்தால் அனைத்து மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்.

போன்ற விடயங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது செயற்பாடாக அமையவுள்ளது. இன்றிலிருந்து இந்தச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வுள்ளோம்” – என்றார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!