ட்ரம்ப்பின் மகனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 14 வயது மகன் பாரன் ட்ரம்ப்பும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இப்போது கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டார் என்று ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாரன் ட்ரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக இதுவரை வெள்ளை மாளிகை தெரிவிக்காத நிலையில், மெலானியா ட்ரம்ப் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 1-ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அவர்களிடம் இருந்து வேறு இடத்துக்கு பாரன் ட்ரம்ப் சென்றபோது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால், அதன்பின் பாரன் ட்ரம்ப்புக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதுகுறித்து மெலானியா ட்ரம்ப் தனது பிளாக்கில் பதிவிட்ட கருத்தில், “என்னுடைய அச்சம் உண்மையானது. என் மகன் பாரனுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நல்வாய்ப்பாக அவருக்கு வளரும் இளம்வயது என்பதால், எந்தவிதமான அறிகுறியும் இல்லை.
ஒரு வகையில் நாங்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் கொரோனாவைக் கடந்து சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். எனவே நாங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டு ஒன்றாக நேரத்தைச் செலவிட முடிந்தது. இப்போது என் மகன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டார் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.