முதலையிடம் சிக்கிக் காணாமல்போன பொலிஸ் அதிகாரி சடலமாக இன்று மீட்பு

நில்வளா கங்கையில் முதலையிடம் அகப்பட்டு காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசியொன்று நில்வளா கங்கையில் வீழ்ந்ததைத் தொடர்ந்து, அதை எடுக்க முயற்சித்தபோது, அவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றது.

நில்வளா கங்கையின் மாகல்லகொட நீர் பம்பும் பகுதிக்கு அருகில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அவ்விடத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின்போது, அவரது நண்பரின் தொலைபேசி கங்கையில் வீழ்ந்தது. குறித்த நண்பரை அவரது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் அந்த இடத்துக்குப் பொலிஸ் அதிகாரி வந்தார்.

கங்கையில் வீழ்ந்த குறித்த கையடக்கத் தொலைபேசியில் வெளிச்சம் வீசுவதை அவதானித்த அவர், கங்கையில் இறங்கி, கையடக்கத் தொலைபேசியை மீட்டு, கரையிலிருந்த மற்றுமொரு நண்பரிடம் கொடுத்தார்.

அவர் கங்கையிலிருந்து கரைக்கு வெளியேற முற்பட்டபோது வழுக்கியதில் முதலையொன்று அவரைப் பிடித்து இழுத்துள்ளது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து, அவர் ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து 300 மீற்றர் தொலைவில் அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

54 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!