சர்வதேச பொறிக்குள் இலங்கை: சிக்கவைத்தது நல்லாட்சி அரசே – விஜயதாஸ ராஜபக்ச குற்றச்சாட்டு

“இலங்கையை சர்வதேச மட்டத்தில் நல்லாட்சி அரசே நெருக்கடிக்குள்ளாக்கியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை தவறான செயற்பாடாகும்.”

-இவ்வாறு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

“எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பான பேச்சு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள வேண்டிய தேவையும், எமது நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையும் அரசுக்குக் கிடையாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“திருகோணமலை துறைமுகத்தைக் கைவசப்படுத்தும் அடிப்படையிலே எம்.சி.சி. ஒப்பந்தம் அபிவிருத்திக்கான நிதி வழங்கல் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டிய தேவை தற்போதைய அரசுக்குக் கிடையாது.

கடந்த அரசு சர்வதேச நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள சிக்கல் நிலையை இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகளை முன்னெடுத்து தீர்வு காணவே முயல்கின்றோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெறும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் நன்கு அறிவார்கள்.

இதன் காரணமாகவே இவர்கள் பொதுத்தேர்தலுக்கு எதிராக நீதிமன்றில் 11 மனுக்கல் தாக்கல் செய்தார்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிலையான அரசை அமைக்கும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!