இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம்

“இலங்கை அரசுடன் சீனா வெளிப்படைத்தன்மையுடன் பேச்சு நடத்துகின்றது. இந்தியாவைப் போல் இரட்டை வேடம் போடவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கையைச் சீனா தொடர்ந்து காப்பாற்றி வருகின்றது. அந்த நட்புறவுக் கடமையிலிருந்து சீனா ஒருபோதும் விலகாது. அது தொடர்பில் இலங்கைக்கு சீனா வாக்குறுதியும் வழங்கியுள்ளது. ஆனால், இந்த விடயத்தில் இந்தியாவை நாம் ஒருபோதும் நம்பவே மாட்டோம்.”  என அமைச்சர்கள் தெரிவித்தனர்.  
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் காணொளி ஊடாக அண்மையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அதன்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மோடி வலியுறுத்தியிருந்தார். ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று ராஜபக்ச அரசினர் வலியுறுத்தி வரும் நிலையில், மோடியின் இந்த நிலைப்பாட்டால் அதிருப்தியடைந்து இராஜதந்திர ரீதியிலான பதிலடியை வெளிக்காட்டுவதற்காகவா, சீனத் தூதுக்குழுவை இலங்கை அரசு அவசர அவசரமாகச் சந்தித்தது என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் கூட்டாகப் பதிலளித்தார்கள்.

அவர்கள் தெரிவித்ததாவது:-

“நல்லாட்சி அரசு நாசமாக்கிய நமது நாட்டைக் கட்டியெழுப்ப சீனாவின் நட்புறவு ராஜபக்ச அரசுக்கு இன்றியமைதாதது. அந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்தான் சீனாவின் தூதுக்குழு இலங்கை வந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகள் வெற்றியடையவதற்குத் சீனா அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று குறித்த தூதுக்குழு வாக்குறுதியளித்துள்ளது. இதை நாம் மனதார வரவேற்கின்றோம்.

இலங்கை அரசுடன் சீனா வெளிப்படைத்தன்மையுடன் பேச்சு நடத்துகின்றது. இந்தியாவைப் போல் இரட்டை வேடம் போடவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கையைச் சீனா தொடர்ந்து காப்பாற்றி வருகின்றது. அந்த நட்புறவுக் கடமையிலிருந்து சீனா ஒருபோதும் விலகாது. அது தொடர்பில் இலங்கைக்கு சீனா வாக்குறுதியும் வழங்கியுள்ளது. ஆனால், இந்த விடயத்தில் இந்தியாவை நாம் ஒருபோதும் நம்பவே மாட்டோம்.  

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் அன்று நிறைவேற்றப்பட்டாலும் அதை முழுமையாக அமுல்படுத்துமாறு இன்று இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவே முடியாது. அதற்கான உரிமை இந்தியாவுக்குக் கிடையாது.

அதேபோல் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற நாமும் ஒருபோதும் இடமளியோம்.

புதிய அரசின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் பிரகாரம்,  இந்திய அரசுடனான ஒப்பந்தத்துக்கமைய  அன்று நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு முடிவுகட்டியே தீர வேண்டும்.

இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படுகின்றது. ஆனால், சீனாவோ இலங்கையின் இறையாண்மையை அன்று தொடக்கம் இன்று வரை பாதுகாத்தே வருகின்றது. இலங்கைக்கு எதிராக சீனா ஒருபோதும் செயற்படாது.

இது தொடர்பில் இலங்கை வந்த சீனாவின் தூதுக்குழுவும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் உறுதியளித்துள்ளது” – என்றார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!