இராவணன் ஆண்டான் என்பது கட்டுக்கதை! – எல்லாவல மேதானந்த தேரர்

“இலங்கையில் இராவணன் என்ற மன்னர் இருந்தார் என்பதை நிரூபிப்பதற்கான எந்தவொரு சான்றுகளும் இல்லை. சில சான்றுகள் இருக்கின்றன என்று சிலரால் கூறப்பட்டாலும் உறுதியாகக் கூறக்கூடிய ஓலைச்சுவடிகளோ அல்லது வேறு எதுவுமோ இல்லை. இராவணன் இலங்கையை ஆண்டார் எனக் கூறப்படுவது கட்டுக்கதையாகும்.”

-இவ்வாறு தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராவணன் தொடர்பில் இந்தியாவில் எழுதப்பட்ட ராமாயணம், மகாபாரதம் போன்ற சாகித்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், இலங்கையில் இராவணன் என்ற மன்னன் இருந்தான் என்பதை நிரூபிப்பதற்கான எந்தவொரு சான்றுகளும் இல்லை.

தொல்பொருள் என்பதற்கு இனம், மதம், மொழி பாகுபாடு கிடையாது. தொல்பொருள் இருந்தால் அது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் உரிமையாகும். கிழக்கிலுள்ள தொல்பொருள்களும் அப்படிதான். அனைவரும் அவற்றை பாதுகாக்கவேண்டும். தமிழர்களின் பாரம்பரியங்கள் அழிக்கப்படும், அடையாளம் மறைக்கப்படும் என்றெல்லாம் கூறப்படுவது தவறான விடயமாகும். செயலணிக்கு சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவில்லை என்ற வாதமும் ஏற்புடையதாக அமையவில்லை. நாம் அறிக்கை வழங்கியதும் அவை பாதுகாக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ், சிங்கள மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்குகின்றது. குறிப்பாக தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு உருப்படியாக எதனையும் செய்யவில்லை. அரசாலேயே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. பொய்யுரைத்து – இனவாதத்தைப் பரப்புவதே அவர்களின் அரசியலாகும்.

அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களால் நாட்டில் மேலும் பிரச்சினைகள் உருவாகும். பிரிவினை ஏற்படலாம். எனவே, அனைவரும் ஐக்கியமாக வாழும் நிலை இருந்தால்போதும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!