பிரசாரத்துக்காக இராணுவத்தை களமிறக்கியுள்ளது கோட்டா அரசு – தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தேர்தல் பிரசாரத்தில் இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளது. இதனை தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தத் தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரச நிர்வாக சேவைமீதும் அதன் அதிகாரிகள்மீதும் இருந்த நம்பிக்கையை இல்லாதுசெய்யும் வகையில் செயற்படும் இந்த அரசு, நிர்வாக சேவைகளுக்கு தொடர்ச்சியாக இராணுவ நியமனங்களை வழங்கிவருகின்றது.

எமது ஆட்சியின்கீழ் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஏனைய கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டதுடன் சுயாதீனமாக வேலைசெய்யக்கூடிய சுதந்திரமும் இருந்தது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டது.

2020 ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எமது ஆட்சியில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், அது இந்த ஆட்சியின்கீழ் தடுத்துநிறுத்தப்பட்டது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவும் குறைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, நாம் இராணுவத்தினரை மதிக்கின்றோம். அவர்களின் சேவைகளைப் பாராட்டுகின்றோம். ஆனால், எதற்காக நிர்வாக சேவைக்கு இராணுவ நியமனங்கள் வழங்கப்படுகின்றன? இதுவரையில் 20 இற்கும் மேற்பட்ட நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது அரசு ஊழியர்களுக்கு முடியாது, அதனால்தான் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது என்ற விம்பத்தை உருவாக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது. இது அரச ஊழியர்களை அவமதிக்கும் செயலாகும்.

மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் போன்ற பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்குகிறார். ஆனால், வங்கி அதிகாரிகளை அழைத்து மிரட்டுகின்றனர். நாடு ஏகாதிபத்தியத்தை நோக்கி பயணிக்கின்றது என்பதையே இது எடுத்துகாட்டுகின்றது. எனவே, சுயாதீன அரச சேவையை இல்லாது செய்வதற்கு இடமளிக்கவேண்டாம் என அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். ஓகஸ்ட் மாதத்துக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி.சீ.ஈ. சாதாரண தரத்துக்கு கீழ் கல்விகற்றவர்களுள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. விண்ணப்பங்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டன. 20 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தி நேர்முகப்பரீட்சையும் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது என்ன நடக்கின்றது?

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தை களமிறக்கி, வீடு வீடாகச் சென்று அரச நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு வருகின்றது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே தடுமாறும் இந்த அரச எப்படி நியமனங்களை வழங்கும்?

இராணுவத்தினரை ஈடுபடுத்தி இவ்வாறு முன்னெடுக்கப்படும் அரசியல் பரப்புரையை தடுத்து நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல் இராணுவம் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும், இராணுவத் தளபதியிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் எமது ஆட்சியின்கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!