இந்திய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்
இந்திய மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான், 74, உடல்நலக் குறைவால், நேற்று இரவு காலமானார்.
மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், பஸ்வான் உயிரிழந்ததாக, அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், சமூக வலை தளத்தில் தெரிவித்தார்.
பீஹாரைச் சேர்ந்த பஸ்வான், சக்யுக்தா சோஷலிஸ்ட் கட்சியில் இருந்தார். 1969ல் பீஹார் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின், லோக் தள் கட்சியில் சேர்ந்தார்.கடந்த, 1977ல், முதல் முறையாக, ஜனதா கட்சி சார்பில், லோக்சபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், ஏழு முறை தொடர்ந்து லோக்சபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த, 2000ல் லோக் ஜன்சக்தி கட்சியைத் துவக்கினார். பெரும்பாலும், ஹாஜிபூர் தொகுதி எம்.பி.,யாகவே இருந்த அவர், இறுதியில், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார்.
மத்தியில் அமைந்த அனைத்து கூட்டணி அரசுகளிலும் இடம் பெற்றிருந்த அவர், ஐந்து பிரதமர்களின் கீழ், அமைச்சராக பணியாற்றியுள்ளார்.தலித் சமூகத்தினரிடையே, மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவராகத் திகழ்ந்தார்.