சிலாபத்தில் இருந்து சுற்றுலா சென்ற ஒருவருக்கு கொரோனா
சிலாபம் – அபகந்தவில பகுதியில் ஒருவருக்கு நேற்று (08) மதியம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வேறு ஒரு நோய்க்கு சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 06 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முடிவுகள் இன்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த தொற்றாளரை உடனடியாக நோயாளர் காவு வண்டியில் சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக இரணவிலவில் அமைந்துள்ள கொவிட் 19 சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்களை தேடி சுகாதார அதிகாரிகள் நேற்று மதியம் முதல் அம்பகந்தவில மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். தேவாலயம் ஒன்றுடன் அவர் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் குறித்த தேவாலயத்தின் அருட்தந்தையர்கள் இருவர் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றாளர் உள்ளிட்ட குழுவினர் கடந்த தினம் சுற்றுலா ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறித்த சுற்றுலாவில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.