ஆனமடுவ இளைஞருக்கு மூன்றாவது தடவை கொரோனா!
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/10/coronaALQtC-1.jpg)
புத்தளம் மாவட்டம், ஆனமடுவவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது தடவையாகத் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ, தேனன்குரிய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரே மூன்றாவது தடவையாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்திலிருந்து வந்த இளைஞர் வெலிக்கந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவேளை அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை முதலில் தெரியவந்தது.
வெலிக்கந்தை வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய இளைஞர் தன்னை வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினார்.
அதன்பின்னர் அந்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனையின்போது இரண்டாவது தடவை அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அதையடுத்துக் அவர் இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இரண்டாவது தடவை அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் அவரது வீட்டைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கும், அவர் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கும் ஏதுவான சூழலைப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் மேற்கொண்டனர்.
சுய தனிமைப்படுத்தலில் இருந்தவேளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளைஞர் இம்மாதம் 2ஆம் திகதி சிலாபத்திலுள்ள கொரோனா பரிசோதனை நிலையத்தில் சேர்க்கப்பட்டார். இதன்போது அவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை தெரியவந்துள்ளது” – என்றார்.