20′ இற்கு எதிராக மூவினத்தவர்களும் வீதியில் இறங்க வேண்டும் – சஜித்
“இலங்கையின் ஜனநாயகத்துக்கு உலைவைக்கக் காத்திருக்கின்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை ஒக்டோபர் மாதம் ஆரம்பத்திலிருந்து மக்களே வீதியில் இறங்கித் தோற்கடிக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் மூவின மக்களும் பங்கேற்க வேண்டும்.”
– இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடளாவிய ரீதியில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களில் ராஜபக்ச அரசுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளன.
இந்தப் போராட்டங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் கட்சி பேதமின்றி அணிதிரள வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் சகல தரப்புகளும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற அதிகாரத் திமிருடன் இந்த அரசு செயற்படுகின்றது. நாட்டு மக்கள்தான் வீதியில் இறங்கி இதற்கு முடிவுகட்ட வேண்டும்” – என்றார்.