காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்


சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். காரியாலயத்துக்கு முன்பாகப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டியும், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்டவற்றைக் கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



“இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுடன் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே?”, “இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுக்களினாலும் பிடித்துச் செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே?”,  எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கோசம் எழுப்பினர்.

அத்துடன் “எங்கள் குழந்தைகள் எங்கே? இதற்குப் பதில் கூற யாரும் இல்லையா?”, “எங்கே எங்கே எங்கள் அப்பா எங்கே?”, “எங்கே எங்கள் சிறார்கள்? கோட்டா அரசே பதில் சொல்..!” போன்ற பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் தாங்கியிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!