பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/120292455_10218582568662808_5598673616968682819_n.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டில் நடந்த சம்பவத்தின்போது திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. ஆதலால், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் திகதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
தலைவர்கள் மீது தனி வழக்கு, லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தனி வழக்கு என்று இரண்டு வழக்குகளாகப் பிரிக்கப்பட்டன. தலைவர்கள் மீதான வழக்கு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி நீதிமன்றத்திலும், கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது.
இதில், ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது தொடரப் பட்ட வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/EjJtacsX0AEW-Uo.jpg)
அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு 2017, ஏப்ரல் 19-ம் திகதி அளித்த தீர்ப்பில் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
இதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நாள்தோறும் விசாரணை நடந்து வந்தது.
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/ayoththi306756.jpg)
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் சிஆர்பிசி 313-ன் கீழ் நீதிபதி முன் காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தனர். இதில் கடந்த ஜூன் 24-ம் திகதி பா.ஜ.அக மூத்த தலைவர் எல்கே.அத்வானி காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தார். அதற்கு முந்தைய நாள் மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி வாக்குமூலம் அளித்தார். இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.
இந்நிலையில் வழக்கில் இதுவரை 351 சாட்சியங்கள், 600 பக்க ஆவணங்களை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து திகதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி யாதவ் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உமா பாரதிக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், அவர் இன்று ஆஜராகவில்லை.
இது தவிர பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் நிர்தியா கோபால் தாஸ் ஆகியோரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இவர்கள் காணொலி மூலம் ஆஜராகினர்.
அதேசமயம், குற்றம் சாட்டப்பட்டுள்ள வினய் கத்தியார், தரம்தாஸ், வேதாந்தி, லாலு சிங், சம்பத் ராய், பவன் பாண்டே உள்பட 26 பேர் ஆஜராகினர்.
லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அதில், “ கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் திகதி பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. அசோக் சிங்கால் உள்ளிட்ட சங்பரிவார் தலைவர்கள் குழந்தை ராமர் சிலையைப் பாதுகாக்க விரும்பினர்.
குற்றம் சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக சிபிஐ உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்யவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி, ஒலி ஆதாரங்களில் நம்பகத்தன்மையும் இல்லை” எனத் தீர்ப்பளித்தார்.