அரசியல் கைதிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்- கணேஸ்வரன்
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/IMG_3024.jpg)
சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல்க் கைதிகளும் உடன் விடுவிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ் அரசியல்க் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் அறவே இல்லை.
இந்த ஆட்சியில் அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் அரசியல் கைதிகளை வைத்து அரசியல் மட்டும்தான் நடத்துகின்றன. அவர்களை விடுவிக்கக்கூடிய எந்தவிதமான முன்னேற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தமிழ் அரசியல்க் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இதில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளும், பொறுப்பாளர்களும் தேர்தல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது, அப்பாவி தமிழ் இளைஞர்களை “தமிழ் அரசியல்க் கைதிகள்” என்ற பெயரில் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்தார்.