இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டத் தடை விதிப்பு
இறைச்சிக்காக மாடுகள் வெட்டத் தடை விதிக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முந்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கால்நடைகளைக் கொல்வது குறித்து கடந் காலங்களில் உள்ளூராட்சி சபைகள் நிறைவேற்றிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து அதனை உண்பவர்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாத மாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுப்பது எனவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
இம்மாதம் 08ஆம் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தின்போது இறைச்சிக்காக மாடுகளை வெட்டத் தடை விதிக்கும் தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் முன்மொழிந்தார்.
எனினும், இது குறித்த தீா்மானம் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகின்றது என தீா்மானம் முன்மொழியப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பதற்காக பல்வேறு குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தைமை குறிப்பிடத்தக்கது.