சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் – நீதி அமைச்சர் அலி சப்ரி
“பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்திலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக இருக்கின்றது.”
– இவ்வாறு நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு எந்தச் சந்தர்ப்பத்திலும் சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்பட எண்ணவில்லை. அரசு, நீதிமன்றம் ,பாராளுமன்றம் ஆகியவற்றில் மிகவும் எச்சரிக்கையாகச் செயற்படும்.
20ஆவது திருத்தச் சட்ட வரைவானது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசமைப்பு சட்டத்துக்குச் செல்வதாகும்.
விரைவான பொருளாதார அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வது இதன் அடிப்படை நோக்கமாகும்” – என்றார்.
இதேவேளை, சர்வஜன வாக்கெடுப்புக்கு ஏதுவாக அமைந்த எந்த விடயங்களும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்குள் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.