டோனி அடித்து காணாமல் போன பந்து ஒன்பது வருடங்களின் பின் கண்டுபிடிப்பு
2011-ம் ஆண்டு ஐசிசி உலகக் கிண்ணப் போட்டியை யாராலும் மறந்திருக்க முடியாது. டோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மும்பை வான்கடே அரங்கில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடந்தது. அன்று கடைசியில் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி பேசிய வார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றன.
டோனி தன்னுடைய ஸ்டைலில் ஆட்டத்தை முடித்துவிட்டார். அருமையான சிக்ஸரைக் கூட்டத்தில் அடித்துள்ளார் என்று உரக்க ரவிசாஸ்திரி பேசினார். இலங்கை வீரர் குலசேகர வீசிய பந்தில் கப்டன் டோனி இமாலய சிக்ஸரை விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து, இந்திய அணிக்குக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார்.
ஆனால், அந்தப் போட்டியில் தோனி கடைசியில் அடித்த சிக்ஸர் அடித்த பந்து காணாமல் போனது. அந்தப் பந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அந்தப் பந்தைக் கண்டுபிடித்துத் தர முன்னாள் கப்டன் சுனிஸ் கவாஸ்கர் மும்பை கிரிக்கெட் அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வான்கடே அரங்கில் எந்தப் பகுதியில் பந்து விழுந்ததோ அந்தப் பகுதிக்கு டோனியின் பெயரை வைத்து, டோனியைக் கவுரவப்படுத்த மும்பை கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்துள்ளது.
டோனி அடித்த பந்து விழுந்த இடம் எம்சிஏ பெவிலியனில் 210-ம் எண் இருக்கையாகும். அந்தப் பந்தை எடுத்துச் சென்ற ரசிகரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தோனி அடித்த பந்தை எடுத்துச் சென்ற பார்வையாளர் சுனில் கவாஸ்கரின் நண்பர் என்பதை மும்பை கிரிக்கெட் அமைப்பு கண்டுபிடித்துவிட்டது. இதையடுத்து, கவாஸ்கரிடம் பேசி, அந்தப் பந்தைப் பெற்றுத் தருமாறு மும்பை கிரிக்கெட் அமைப்பு வேண்டுகோள் வைக்க உள்ளது.
அந்தப் போட்டியில் டோடி சிக்ஸர் அடித்த பந்தை எடுத்துச் சென்ற ரசிகர் தனது வீ்ட்டில் பந்தையும், அந்தப் போட்டியின் டிக்கெட்டையும் பாதுகாத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏறக்குறைய 9 ஆண்டுகளாக தோனி அடித்த பந்து தேடப்பட்டு வந்த நிலையில், இப்போதுதான் அது இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.