நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி 26இல் உண்ணாவிரதம் 28இல் பூரண ஹர்த்தால்

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளை 26ஆம் திகதி வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், எதிர்வரும் 28ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று அறிவித்துள்ளன. இந்த இரு போராட்டங்களிலும் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறும் அந்தக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தியாக தீபம் திலீபன் உட்பட தியாகிகளுக்கான நிவேந்தல் உரிமையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று முதினம்மாலை ஒன்றுகூடின. இது விடயம் தொடர்பில் யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. நேற்று நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. நினைவேந்தலுக்கான தடையுத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அறவழிப் போராட்டங்களுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று 10 தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுகூடி நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 26ஆம் திகதி தியாக தீபம் திலீபனை ஆலயங்களில் விசேட பூஜைகள் நடத்தியும், வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியும் நினைவுகூருமாறும் தமிழ்த் தேசியக் கட்சிகளினால் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹர்த்தால் போராட்டத்துக்குச் சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கட்சிகளினால் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்மொழியைப் பேசும் முஸ்லிம் மக்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், மலையக அரசியல்வாதிகள் உள்ளிட்ட மலையகச் சமூகமும் மற்றும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!