பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பேரறிவாளன். இவரது தூக்குத் தண்டனை பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு 90 நாட்கள் சிறை விடுப்பு வழங்க வேண்டுமெனக் கோரி மார்ச் மாத இறுதியில் அவரது தாயார் அற்புதம் அம்மாள் சிறை நிர்வாகத்திற்கு மனு செய்திருந்தார். கொரோனா தொற்று அதிகம் உள்ள காலம் என்பதாலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே சிறுநீரகத் தொற்று இருப்பதாலும் அவரை 90 நாட்கள் சிறை விடுப்பில் அனுப்ப வேண்டுமென அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
ஆனால், அவரது மனுவை கடந்த ஜூலை 29ஆம் தேதி சிறை நிர்வாகம் நிராகரித்தது. இதையடுத்து, பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம் அம்மாள் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆயுள் தண்டனைக் கைதிகளைப் பொறுத்தவரை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பரோல் வழங்க முடியுமென்றும் அவருக்கு சமீபத்தில்தான் பரோல் வழங்கப்பட்டிருப்பதால், மீண்டும் பரோல் வழங்கப்பட அவர் மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறைக்குள் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுடன்தான் இருப்பதாகவும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு கூறியது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த கிருபாகரன் – வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளித்து உத்தரவிட்டது. அவர் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் இந்தத் தீர்ப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.