தமிழ்நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமையை உறுதிப்படுத்துக – சுரேன் ராகவன்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சுமார் 83 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் இடம்பெறும் தேர்தலிகளில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் நேற்று (23) கலந்துகொண்டு கருத்து தெரிவுக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படையாக மட்டுமன்றி ஒரு நாகரீகத்தின் முதுகெலும்பாகவும் காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டிய கலாநிதி சுரேன் ராகவன் தமிழர்களைப் போன்ற தேர்தல் அநியாயங்களுக்கு முகம்கொடுத்த சனசமூகம் இலங்கையில் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் கால சந்தர்ப்பத்திலேயே தமிழர்களின் பொக்கிஷமான யாழ்ப்பாண நூல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது என்பதையும் அதியுயர் சபையான பாராளுமன்றம் நினைவில் வைத்திருக்க வேண்டுமென்வும் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் இன அல்லது மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்யுமாறும், அவ்வாறு காணப்படும் கட்சிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை மாற்றிக்கொண்டு இலங்கையர் என்ற ரீதியில் அரசியல் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்க வெளிவிவகார அமைச்சும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அமைச்சும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், யுத்தத்தின் காரணமாக பாதிப்படைந்து அவயங்களை இழந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற யோசனைகளையும் பாராளுமன்ற விவாதத்தின்போது முன்வைத்தார்.