75 கள்ள வாக்கு விவகாரம் : சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குப் போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக தேர்தல்கள் முறைப்பாட்டு யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும், சட்டத்தரணியுமான செலஸ்ரீன் ஸ்ரானிஸ்ஸாஸ் என்பவராலே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சி. சிறீதரன் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் போட்டதாக கூறியிருந்தார். இக் கருத்து தொடர்பாகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று புதன்கிழமை மாலை குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டு செய்யப்பட்டதற்கான ஆதாரத்துடன் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்ற குறித்த சட்டத்தரணி முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.