வேலை இழந்து வீதிகளில் யாசகம் கேட்ட இந்தியர்களுக்கு சிறை
தெலங்கானா, ஆந்திரா, உ.பி., காஷ்மீர், பிஹார், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் சவுதி அரேபியாவின் பல நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். அவர்களில் பலருருடைய விஸா முடிவடைந்துவிட்டது.
சாப்பாட்டுக்கு வழியில்லாததால், அவர்களில் பலர் சாலைகளிலும், தெருக்களிலும் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுபோல் யாசகம் கேட்டு திரிந்த 450 இந்தியர்களை, சவுதி அரசு பிடித்து தடுப்பு காவல் மையத்தில் அடைத்துள்ளது. அவர்களில் உ.பி.யைச் சேர்ந்தவர்கள் அதிகம். இதனால், அவர்கள் கண்ணீருடன் தங்கள் நிலையை விளக்கி வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
‘‘நாங்கள் செய்த குற்றம் யாசகம் கேட்டதுதான். வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. வேலை இழந்ததால் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோம். தடுப்பு காவல் மையத்தில் துன்பத்தை அனுபவித்து வருகிறோம்’’ என்று அந்த வீடியோவில் பலர் கண்ணீர் விட்டு நிலைமையை விளக்கி உள்ளனர்.
இன்னொருவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் பலருக்கும் இங்கு விஸா முடிந்துவிட்டது. ஆனால், அந்த நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மட்டும் சவுதி அதிகாரிகள் உதவி செய்கின்றனர். அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால், எங்களை மட்டும் அடைத்து வைத்துள்ளனர்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், சமூக சேவகரும், எம்பிடி தலைவருமான அம்ஜத் உல்லா கான் கூறும்போது,
“விஸா முடிந்தவர்களைதான் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அவர்களை மீட்க கோரி, இந்திய பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சவுதிக்கான இந்திய தூதர் அவுசப் சயீத் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்” – என்றார்.