20 யாருடையது… 20 யாருக்கு..? தெளிவுபடுத்தும் மக்கள் விடுதலை முன்னணி
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பாதகம் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக வெவ்வேறு பிரதேசங்களில் சம்மேளனங்களை ஏற்பாடு செய்துள்ளோம். இதன் ஆரம்ப நடவடிக்கையாக எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பொது நூலகத்தில் முதலாவது சம்மேளனம் இடம்பெறவுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்
” 20 யாருடையது ? 20 யாருக்கு என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த சம்மேளனம் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் அடுத்தடுத்த நாட்களில் கண்டி, காலி, மாத்தறை, அநுராதபுரம் உள்ளிட்ட வெவ்வேறு மாவட்டங்களிலும் இதே போன்று சம்மேளனங்கள் முன்னெடுக்கப்படும் தற்போது 20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துதல் மற்றும் பாராளுமன்றத்தில் வாக்கினை அதற்கு எதிராக பயன்படுத்தல் என்பவற்றை மாத்திரமே எம்மால் செய்ய முடியும். அவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் தயாராகியுள்ளோம்.
20 ஐ நிறைவேற்றாமல் இருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கும்அரசியலமைப்பின் மூலமாக மாத்திரம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாது. அரசியலமைப்பு என்பது அதிகாரத்திற்காகவும் மேலதிக அதிகாரங்களுக்காகவும் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. 18, 19 மற்றும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆகிய எந்த திருத்தமுமே மக்களின் பிரச்சினைக்கு உண்மையான தீர்வாக அமையும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறாகும். அது ஏகாதிபத்தியத்திற்கு வழியமைத்துக் கொடுக்கும். இதனையே நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதியுடைய அதிகாரங்களை குறைப்பது மாத்திரமல்ல. நிறைவேற்றதிகார முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” – என்றார்.