ஜனாதிபதி புத்தளம் விஜயம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று (19) புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
புத்தளம் மதுரங்குளி நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு இராணுவத் தளபதிக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக் கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.
மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.
மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.
இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.