கண்டியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து மூவர் பலி
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/2-5.jpg)
சீரற்ற காலநிலையால் கண்டியில் இன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் ஒன்றரை மாதப் பச்சிளம் குழந்தையும், அக்குழந்தையின் தாய், தந்தையும் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளனர்.
கண்டி – பூவெலிகட சங்கமித்த மாவத்தையில், இன்று அதிகாலை 5 மணியளவில் நிலம் தாழிறங்கியதால் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்தக் கட்டடத்துக்கு அருகில் இருந்த 2 வீடுகளும் நிர்மூலமாகியுள்ளன.
இந்த இடிபாடுகளில் சிக்கி ஒரு வீட்டிலிருந்த ஒன்றரை மாதப் பச்சிளம் குழந்தையும், அக்குழந்தையின் பெற்றோரும் நசியுண்டு பரிதாபகரமாகப் பலியாகியுள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் காலையிலேயே குழந்தையைப் படுகாயங்களுடன் மீட்டு கண்டி போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பிற்பகல் சாமில பிரசாத், அச்சலா ஏகநாயக்க ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
அச்சலா ஏகநாயக்க ஒரு சட்டத்தரணி. திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அவரின் கணவர் சாமில பிரசாத் அதே இடத்தில் ஒரு ஹோட்டலை நடத்தி வந்துள்ளார்.
கட்டடத்தின் நுழைவாயில் பகுதியைத் தவிர, மிகுதி அனைத்துப் பகுதிகளும் இடிந்து விழுந்து விட்டன.