வரும் என சம்பந்தன் ஐயா சொன்ன எவையுமே வரவில்லை – அங்கஜன்
“நல்லாட்சி அரசாங்கம் மூலம் எல்லாம் கிடைத்துவிடும் என்று சொன்னார்கள். நாங்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கும் என்று சம்பந்தன் ஐயா சொன்னார். எங்களுக்கு தீபாவளிக்குத் தீர்வு வரும், பொங்கலுக்குத் தீர்வு வரும், புது வருடப் பிறப்புக்குத் தீர்வு வரும் என்று பல்வேறு கதைகளைச் சொல்லியிருந்தார். ஒவ்வொரு தீபாவளிக்கும் ஏதாவது தீர்வு வருமா என்று நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம். வந்ததா? இல்லையே! நல்லாட்சி அரசாங்கம் எங்களைக் கைவிட்டுவிட்டது”
என ஸ்ரீ லங்கா சுதந்திரக கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“ஜனாதிபதியைத் தெரிவு செய்யப் போவது தமிழர்களுடைய வாக்கு எனக் கூறியிருந்தார்கள். வீதிக்கும், வீட்டுக்கும் வெள்ளை வான் வரும் எனவும், கிரீஸ் பூதம் வரும் எனவும் கூறினார்கள். ஆனால், எதுவும் வரவில்லை. அவர்கள் எதிர்பார்த்த ஜனாதிபதியும் வரவில்லை.
நாங்கள் எதிர்பார்த்த அபிவிருத்தி வீதி அபிவிருத்தி அல்ல. சகல துறைகளுக்குமான அபிவிருத்தியை எதிர்பார்த்தோம். ஆனால், ஆறுதல் பரிசு போன்று கம்பெரலிய என்ற திட்டம் தான் கிடைத்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் எங்கள் இனத்தினுடைய இருப்பு தக்க வைக்கப்படும் என எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை!
வாய்ப்பு கிடைத்ததா இல்லையா என்பது தொடர்பில் ஒரு கேள்வி உள்ளது. வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அதனை விட்டுவிடலாம். ஆனால், அவர்கள் சொன்ன நல்லாட்சி காலத்தில் வாய்ப்புகளும் ஏராளம் வந்தன. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது, பட்ஜெட் வந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரும் பொழுதோ அல்லது பட்ஜெட் வரும் பொழுதோ பல்வேறு நிபந்தனைகளை இவர்கள் வைத்திருக்க முடியும்.
ஆனால், இவர்கள் வைத்த நிபந்தனைகள் மக்கள் சார்ந்த இருப்புக்களைத் தக்க வைக்கக்கூடிய நிபந்தனைகளாக இருக்கவில்லை; அவை யாவும் தனி நலம் நோக்கிய நிபந்தனைகளகளாகவே இருந்தன” – என்றார்.