பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை பொறுப்பதிகாரி விளக்கமறியலில்
60,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை விநியோக பிரிவின் பொறுப்பதிகாரியை தொடர்ந்து 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடுவல பகுதியைச் சேர்ந்த அஞ்சன மாலிங்க எனும் நபர் ஊழல் ஒழிப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார்.
பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலைக்கு வினியோகஸ்தர் ஒருவரினால் விநியோகிக்கப்படும் பாவனைக்கு தகுதியற்ற பழங்களை நிராகரிக்காமல் பெற்றுக் கொள்வதற்காக குறித்த சந்தேக நபரினால் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் அதற்கான இலஞ்சப் பணமாக 60 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.