ரம்சி ராசீக் 5 மாதங்களின் பிணையில் விடுதலை
இலங்கையில் பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்றுக்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ரம்சி ராசீக் 5 மாதங்கள் 8 நாட்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்டி கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச ஊழியர் ரம்சி ராசீக் கடந்த கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் எழுதிய ‘பேஸ்புக்’ பதிவில், “முஸ்லிம்கள் சிந்தனா ரீதியான ஜிகாத்தில் ஈடுபட வேண்டும்” என்று கூறியிருந்தார் எனவும், அது இனங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டுவதற்கான அழைப்பு எனவும், அதற்கு முன்னரும் அவர் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்துள்ளார் எனவும் பொலிஸார் அவரை ஆஜர்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என ரம்சீ ராசிக் கூறினார்.
ரம்சி ராசீக் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு எதிராகவும் இனவாதத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தவர் என்பதற்கான ஆதாரங்களை சட்டத்தரணி சுமந்திரன் அப்போது நீதிமன்றத்திடம் முன்வைத்திருந்தார்.
சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ரம்சி ராசீக் சுகவீனம் அடைந்திருக்கின்றார் எனவும், அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டிருக்கின்றது எனவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கின்றது எனவும் அம்னஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்தநிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ரம்சி ராசீக்குக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.