உலகக் கிண்ண ஆட்ட நிர்ணய விடயம்: உபுல் தரங்க 2 மணி நேரம் வாக்குமூலம்
இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க இன்று விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை 10 மணிக்கு குறித்த பிரிவில் முன்னிலையான அவர், சுமார் 02 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் வழங்கி விட்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக குறித்த காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா குறித்த பிரிவில் நேற்று சுமார் 06 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.