திலீபனின் நினைவேந்தலுக்கு கிளிநொச்சியிலும் நீதிமன்றம் தடை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடாது எனக் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இது தொடர்பான நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் கிளிநொச்சிப் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக இன்று அதற்கான தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.
இதன்படி இன்று முற்பகல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் நீதிமன்ற உத்தரவு தொடர்பான அறிவித்தலைக் கையளித்துள்ளனர்.
இந்த அறிவித்தலின் பிரகாரம் 15.09.2020 தொடக்கம் 26.09.2020 வரையான காலப்பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள், ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் எதனையும் நடத்தக்கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.