மட்டக்களப்பில் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களை வென்றெடுக்கும்! – வேட்பாளர் கமலதாசன்

“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை நான்கு ஆசனங்களை வென்றெடுத்தே தீரும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பேத்தாழையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழர்களின் உரிமை தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்கவே தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆயுத ரீதியான போராட்டத்தால் பெற முடியாததை, ஜனநாயக அரசியலால் பெற முடியும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையாலே நானும் அரசியலில் களமிறங்கியுள்ளேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள மக்கள் பலத்தின் அடிப்படையில் இம்முறை நான்கு ஆசனங்களை வென்றெடுக்க முடியும். தமிழர்களின் அரசியல் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தமிழர்கள் உணர்ந்துள்ளதால் நான்கு ஆசனங்களைப் பெறுமளவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பலமடைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று கட்சிகளை ஒருங்கமைத்து உருவாக்கப்பட்ட கட்சியாகும். இதன் தலைமைகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால் புதிய அரசமைப்பு தொடர்பில் பேச்சு நடத்தவும் எமது கட்சி தயாராகவுள்ளது” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!