ஜனவரி 27-ல் விடுதலையாகிறார் சசிகலா
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் திகதி சசிகலா விடுதலை ஆவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். `சிறையில் இருக்கும் சசிகலாவின் வருகை எப்போது?’ – இந்த ஒற்றைக் கேள்விதான் அ.தி.மு.க வட்டாரங்களில் கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக இருக்கிறது. ஆகஸ்ட் 15-திகதி விடுதலை என்ற செய்தி முதலில் வெளியானது. எனினும் அந்த தகவலை சிறை நிர்வாகம் மறுத்தது.
தொடர்ந்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன், “செப்டம்பர் இறுதியில் சசிகலா விடுதலையாக வாய்ப்பிருக்கிறது’’ என்று சொல்ல, மீண்டும் பரபரப்பானது தமிழக அரசியல் களம்.
அவ்வப்போது இது போன்ற தகவல்கள் வருவதும், பின்னர் அது வதந்தியாக போவதும் தொடர்கதை ஆகி வந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு ஜனவரி 27ம்திகதி சசிகலா விடுதலை ஆவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27ல் விடுதலையாகிறார் என்றும் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அபராதத்தொகையான ரூ.10 கோடியை அவர் நிச்சயம் கட்ட வேண்டும், ஒருவேளை கட்ட தவறினால், 2022 பிப்ரவரி மாதம் 27-ம் திகதி தான் விடுதலையாவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.